காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் தேர்வாணையர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சங்கம்பட்டி-காந்தி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தேர்வாணையராக பணிபுரிந்துள்ளார்.
தற்போது தனியார் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக பணிபுரிந்து வருகிறார். 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தன.
8 மணி நேரம் அதிரடி சோதனை
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், குமரகுரு ஆகியோர் அடங்கிய போலீசார் சங்கம்பட்டி- காந்திநகரில் உள்ள ரவியின் வீட்டில் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது.
இதில் ரவி மற்றும் அவரது மகள்-மருமகன் பெயரில் வருமானத்துக்கு அதிகமான வீடுகளும், மனைவி சுமதி பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 22 வாகனங்களும் வைத்திருந்தது தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மேலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ள சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். அதற்கான முக்கிய ஆவணங்களை அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடமும், குடும்பத்தினரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story