வைகை ஆற்றில் ெபருக்கெடுத்த வெள்ளம்


வைகை ஆற்றில் ெபருக்கெடுத்த வெள்ளம்
x
தினத்தந்தி 2 Dec 2021 1:34 AM IST (Updated: 2 Dec 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் மேம்பாலங்களில் நின்று கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மதுரை,

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் மேம்பாலங்களில் நின்று கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
வைகை ஆறு
மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வைகை அணை. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தேனி மாவட்டத்தின் பல இடங்கள் மற்றும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கொண்டே வருவதால் இன்னும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை வைகை அணை திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போதும் வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளம் இரு கரைகளை தொட்டபடி செல்கிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவு வெள்ளம் செல்வது மதுரை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் மேம்பாலங்களில் நின்று கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பலத்த மழை
இதற்கிடையே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் மேலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றும் மாலை மதுரை நகர் பகுதிகளில் ஆங்காங்கே சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. மாலை நேரம் என்பதால் வாகன ஓட்டிகள் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சென்றனர். இந்த மழையானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதுபோல், புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் கனமழை பெய்தது.
மூழ்கிய தரைப்பாலம்
வைகை அணை திறப்பு மற்றும் கனமழை காரணமாக சிம்மக்கல்-யானைக்கல் பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இந்தநிலையில், நேற்று யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலையிலும் வெள்ளம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி கீழே விழுந்த காட்சிகளை காணமுடிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சர்வீஸ் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் வைத்து போக்குவரத்தை துண்டித்தனர். அந்த வழியாக வந்தவர்களை வேறு வழியில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேண்டுகோள்
மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் எனவும், மழை பெய்யும் பகுதிகளில் கால்நடைகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும், தொழுவங்களை பாதுகாப்பாக அமைத்துகொள்ளவும் கலெக்டர் அனிஷ்சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story