குன்னத்தூர் சத்திர கட்டிடம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்-அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குன்னத்தூர் சத்திர கட்டிடம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்-அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Dec 2021 8:14 PM GMT (Updated: 1 Dec 2021 8:14 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கட்டப்பட்டுள்ளகுன்னத்தூர் சத்திர கட்டிடம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கட்டப்பட்டுள்ளகுன்னத்தூர் சத்திர கட்டிடம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடைகள்

மதுரையை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே இருந்த பழமையான குன்னத்தூர் சத்திர கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிதாக 200 கடைகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே குன்னத்தூர் சத்திரத்தில் 20 கடைகள் இருந்தது. தற்போது புதுமண்டபத்தில் கடை நடத்தி வருபவர்களுக்கும் இந்த சத்திரத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கட்டிடத்திற்குள் செல்வதற்கு ஒரே வழி மட்டுமே உள்ளது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உள்ளே இருப்பவர்கள் வெளியேற அவசர வழிகள் இல்லை. எனவே முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு குன்னத்தூர் சத்திரத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்கும்படி உத்தரவிர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பாதுகாப்பானதா?
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஜெகநாதன் ஆஜராகி, குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் கடைக்காரர்களுக்கு அனுமதிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் கடைக்காரர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், அங்கு கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட உள்ளனரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், இதுவரை கடைக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அப்போது நீதிபதிகள், கடைகளை ஒதுக்கீடு செய்வது, ஒப்படைப்பது என்பது முக்கியம் இல்லை. அந்தக்கட்டிடம் பாதுகாப்பானதா? என்பது உறுதி செய்ய வேண்டும் என்றனர். பின்னர் இதுகுறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story