ரெயில் பாதை அமைக்க வனத்துறை வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ரெயில் பாதை அமைக்க வனத்துறை வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Dec 2021 1:47 AM IST (Updated: 2 Dec 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி-அங்கோலா இடையே ரெயில் பாதை அமைக்க கர்நாடக வனத்துறை வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு: உப்பள்ளி-அங்கோலா இடையே ரெயில் பாதை அமைக்க கர்நாடக வனத்துறை வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

ரெயில் பாதை

கர்நாடகத்தில் வடக்கு கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகத்தை இணைக்கும் வகையில் ரெயில் பாதை இல்லை. குறிப்பாக தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலாவுக்கு ரெயில் பாதை இல்லை. எனவே உப்பள்ளி-அங்கோலா இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

 இதற்காக கர்நாடக அரசு ஒரு திட்டத்தை தீட்டி உப்பள்ளி-அங்கோலா இடையே ரெயில் பாதை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டு திட்ட அறிக்கை தாக்கல் செய்தது.  இதற்கு கர்நாடக வனத்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

ஆனால் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ரெயில்வே வழிப்பாதை முழுக்க முழுக்க மேற்குதொடர்ச்சி மலைப்பாதை வழியாக அமைக்கப்பட உள்ளது. 

இடைக்கால தடை 

இதனால் சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மரங்களை வெட்டி அகற்ற வேண்டியதுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வனவிலங்குகளும் தங்களது இருப்பிடத்தை இழக்க நேரிடும். எனவே இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என கோரி சமூக ஆர்வலர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் டிவிஷன் பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உப்பள்ளி-அங்கோலா ரெயில்வே திட்டத்திற்கு கர்நாடக வனத்துறை வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 
அத்துடன் இந்த ரெயில்வே திட்டம் தொடர்பாக தேசிய வனவிலங்கு ஆணையம் ஆய்வு நடத்தி உரிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story