தர்மபுரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
தர்மபுரியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
போதை பொருட்கள்
தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்துகொண்டு போதை பொருட்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலம் இலக்கியம்பட்டி பகுதியில் முடிவடைந்தது.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள், போலி மது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
30 இடங்களில்...
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் தலா 3 இடங்கள் வீதம் மொத்தம் 30 இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், கலால் உதவி ஆணையர் தணிகாசலம், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சோமசுந்தரம், தாசில்தார்கள் ராஜராஜன், ரமேஷ், கலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story