ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க ரூ34 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது தர்மபுரியில் பரபரப்பு


ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க  ரூ34 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது தர்மபுரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 1:49 AM IST (Updated: 2 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க ரூ34 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரியில் ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க ரூ.34 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலுவைத்தொகை
தர்மபுரி எஸ்.வி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. வனத்துறையில் வனவராக பணிபுரிந்த இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் ஓய்வூதியம் பெற்று வந்தார். இதனிடையே கடந்த 2007-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி சென்னம்மாள் குடும்ப ஓய்வூதியத்தை பெற்று வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு அவரும் இறந்துவிட்டார். 
இந்த நிலையில் 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஓய்வூதிய நிலுவைத்தொகையை சென்னம்மாள் பெறவில்லை. இதுபற்றி அறிந்த அவருடைய மகள் சாந்தி அந்த நிலுவைத்தொகையை வழங்கக்கோரி உறவினர் முருகன் என்பவரின் உதவியுடன் தர்மபுரி மாவட்ட வன அலுவலக வளாகத்தில் உள்ள சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
அப்போது அங்கு பணிபுரியும் இளநிலை உதவியாளர் பழனிசாமி (வயது 54) நிலுவைத்தொகையை வழங்க ரூ.34 ஆயிரத்து 410 தொகையை லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக முருகன் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.34 ஆயிரத்து 410-ஐ முருகனிடம் கொடுத்து அலுவலரிடம் வழங்குமாறு கூறினர். 
இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு சென்று அந்த பணத்தை பழனிசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்ற பழனிசாமியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த தொகையை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 
இளநிலை உதவியாளர் கைது
இதைத்தொடர்ந்து நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் இளநிலை உதவியாளர் பழனிசாமியை கைது செய்தனர். நிலுவைத்தொகை வழங்க வனத்துைற அலுவலர் லஞ்சம் வாங்கிய சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story