சேலத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
சேலத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
வாலிபர் பிணம்
சேலம் குகை ராமலிங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளார். பின்னர் அதில் புது வீடு கட்ட முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த பழைய வீட்டை கூலி ஆட்கள் மூலம் இடிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வழக்குப்பதிவு
அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜேஷ்குமார் (வயது23) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராஜேஷ்குமாரின் பெற்றோர் செவ்வாய்பேட்டை போலீசில் அளித்த புகார் மனுவில், எங்களது மகனை சிலர் கடத்தி கொலை செய்து கட்டிட இடிபாடுகளுக்குள் போட்டு உள்ளனர். எனவே அவனது சாவில் சந்தேகம் உள்ளது. எனவே மகனை கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story