புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதி
மதுரை மாவட்டம் தாமரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாறை தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சர்வேஷ் ராஜாராம், தாமரைபட்டி.
கால்வாய் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 5 பாசன கால்வாய் செடிகொடிகள் வளர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை கால்வாய் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரத்து இல்லை. எனவே, உடனடியாக கால்வாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
குப்பையில் தீ
மதுரை செல்லூர் 7-வது வார்டு மணவாள நகர் மெயின்ரோடு பகுதியில் உள்ள குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் புகை மூட்டமாக காணப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்.
சங்கர பாண்டியன், மதுரை.
எரியாத தெருவிளக்குகள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கபுலிபட்டி கிராமத்தில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
நாகநாதன், சிங்கபுலியாபட்டி.
சந்தை கட்டிடம்
மதுரை குமாரம் ஊராட்சி ஒன்றியத்தில் சந்தை உள்ளது. ஆனால் இந்த சந்தையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் வியாபாரிகள் சாலையில் கடை வைத்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சந்தை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கு சந்தை செயல்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், குமாரம்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் அசோக்நகர் 4-வது தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகனங்்களில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாண்டி, மம்சாபுரம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை பைக்காரா அரசினர் காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுகுமார், மதுரை.
கண்மாயில் உடைப்பு
விருதுநகர் மாவட்டம் ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
சந்திரன், விருதுநகர்.
சேறும், சகதியுமான சாலை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பாறைப்பட்டி நடுத்ெதருவில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளதால் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
பொதுமக்கள், பாறைப்பட்டி.
போக்குவரத்துக்கு இடையூறு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் ஆட்டோ செல்ல முடியவில்ைல. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைக்க வேண்டும்.
இப்ராகிம், கீழராமநதி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் ெதால்லையால் பொதுமக்கள் ெதருவில் செல்ல அச்சம் அடைகின்றனர். எனவே, தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராஜா, காரைக்குடி.
Related Tags :
Next Story