21 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து
குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 21 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.
நாகா்கோவில்:
குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 21 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.
கேரளாவுக்கு பஸ் நிறுத்தம்
நாடு முழுவதும் கொரோனா பரவியதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தொற்று பரவல் தீவிரமடைந்ததால், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இ-பாஸ் பெற்ற கார், வேன் போன்ற வாகனங்களில் பொதுமக்கள் சென்று வந்தனர்.
பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால், தமிழகத்தில் இருந்து கா்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. அதே சமயத்தில், கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், இருமாநிலங்களுக்கும் இடையேயான பஸ் போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டன. ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
21 மாதங்களுக்கு பிறகு...
தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் கேரளா-தமிழகம் இடையே பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். உடனே தமிழக அரசும், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று கொண்டது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
21 மாதங்களுக்கு பிறகு குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உற்சாக பயணம்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று காலை முதலே தமிழக பஸ்கள் இயக்கப்பட்டன. காலையில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. மதியம் சற்று குறைவாக காணப்பட்ட நிலையில், மாலையில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பஸ்சில் பயணிகள் முக கவசம் அணிந்தபடி உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று 40 பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 20 பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கமாக குமரியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படும். முதல் நாள் என்பதால் குறைவாக இயக்கப்பட்டது என போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story