நெல்லை டவுனில் குளம் போல் மாறிய சாலைகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி


நெல்லை டவுனில் குளம் போல் மாறிய சாலைகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 2 Dec 2021 4:01 AM IST (Updated: 2 Dec 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் குளம் போல் மாறிய சாலைகள்

நெல்லை:
நெல்லை டவுனில் குளம் போல் மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
பள்ளமான சாலைகள்
நெல்லை மாநகருக்கு தென்காசி, அம்பை, முக்கூடல், செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் நெல்லையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி மற்றும் உணவு பொருட்கள் தினமும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாகனங்கள் நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு, கல்லணை பள்ளிக்கூட சாலை, காட்சி மண்டபம், வழுக்கோடை மற்றும் தொண்டர் சன்னதி, ஆர்ச் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வருகின்றன. 
மேலும் நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருந்து வந்தது. 
இந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பெரிய, பெரிய பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் மாறி காட்சி அளிக்கிறது. 
கல்லணை பள்ளிக்கூடம்
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நெல்லை டவுன் காட்சி மண்டபம், கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் முட்புதர்கள், அமலைச்செடிகள் அடைத்து தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த தண்ணீர் அப்படியே பள்ளிக்கூடம் அருகே உள்ள கால்வாயை உடைத்துக்கொண்டு சாலையில் செல்கிறது.
இதனால் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து சென்றன. நேற்று காலையில் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 
வீடுகளை வெள்ளம் சூழந்தது
தொடர்ந்து அந்த பகுதியில் நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மற்றும் ஓடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்துதண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இருந்தாலும் கால்வாயில் முட்புதர்கள் மண்டி இருப்பதால் தண்ணீர் அப்படியே சாலையில் செல்கிறது. இதனால் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. அந்த தண்ணீர் நெல்லை டவுன் மவுண்ட் ரோடு, செண்பகம்பிள்ளை தெரு, தடிவீரன் கோவில் தெரு ஆகிய பகுதி உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை டவுன் காமாட்சி அம்மன் கோவிலில் முட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. பக்தர்கள் அந்த தண்ணீருக்குள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலுக்குள் நிற்கும் தண்ணீரில் மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் நெல்லை டவுன் பகுதியில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

Next Story