இறந்தவர்களின் பெயரில் பணம் வழங்கி மோசடி


இறந்தவர்களின் பெயரில் பணம் வழங்கி மோசடி
x
தினத்தந்தி 2 Dec 2021 6:21 PM IST (Updated: 2 Dec 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இறந்தவர்களின் பெயரில் பணம் வழங்கி மோசடி நடந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை கோலியனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வீடுகளுக்கு சென்று தடுப்பூசி 

மக்களின் நேரடி தொடர்பில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு சேவை செய்திட தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். 
இதுவரை தடுப்பூசியே செலுத்தாத நபர்களை ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மோசடி புகார் 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இறந்தவர்களின் பெயரில் தற்போது பணம் வழங்கி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. இதுசம்பந்தமாக தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இத்திட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கவனமுடன் பணியாற்றி சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை திறம்பட செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோலியனூர் நடராஜன், ஜோசப்கிறிஸ்துராஜ், கண்டமங்கலம் முருகன், சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story