குன்னூர் நகராட்சி கடைகளின் வாடகையை குறைக்கக்கோரி வெள்ளைக்கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம்
குன்னூர் நகராட்சி கடைகளின் வாடகையை குறைக்கக்கோரி வெள்ளைக்கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம்
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் வளாக பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 910 கடைகள் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் கடை வாடகையை பல மடங்கு உயர்த்தியது. இதனால் வாடகையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்த்தப்பட்டுள்ள நகராட்சி கடைகளின் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார்.
அதன்படி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தரும்படி தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 901 நகராட்சி கடைகளில் வெள்ளைக் கொடிகளை வியாபாரிகள் ஏற்றி நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
வியாபாரிகள் பொதுநலச்சங்க தலைவர் பரமேஸ்வரன் வெள்ளைக் கொடியை ஏற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் வெள்ளை கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் பொது நலச்சங்க உறுப்பினர்கள் சப்தர் உசேன், நாசர், பாலசுப்பிரமணி, முபாரக், கிருஷ்ணசாமி, சுதா, பாலகிருஷ்ணன், அண்ணா வணிகர் சங்க தலைவர் சேகர் மற்றும் நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story