தூத்துக்குடியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்


தூத்துக்குடியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்
x
தினத்தந்தி 2 Dec 2021 8:29 PM IST (Updated: 2 Dec 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
வடியாத வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. கடந்த 25-ந் தேதி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் வாைழகள், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தன. 
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வெள்ளம் வடியாததால் மழை தண்ணீருக்கு நடுவே தீவில் வசிப்பது போன்று வீடுகளில் மக்கள் முடங்கி கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு 1.45 மணிக்கு வந்தார். 
பின்னர் அங்கு இருந்து கார் மூலம் 2.50 மணிக்கு தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதிக்கு சென்றார். அங்கு மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் இறங்கி மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நடவடிக்கை
அப்போது மு.க.ஸ்டாலினிடம், பிரையண்ட்நகர் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு மழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் மனுவும் கொடுத்தனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும். மாவட்டத்தில் தேங்கிய உள்ள மழைநீரை அகற்றிட ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரிக்கவும், நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உடனடி நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தரைப்பாலங்களை சீரமைத்து, மேம்பாலங்கள் அமைக்கவும், நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு அத்தியாவசிய ெபாருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே திரண்டு இருந்த விவசாயிகள் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர். அதில் ‘தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் மானாவாரி பயிர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
நிவாரண உதவிகள்
தொடர்ந்து அம்பேத்கர் நகரில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் தூத்துக்குடி ஏ.வி.எம். மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பை நிவாரண உதவியாக மு.க.ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் ரகுமத்நகர், முத்தம்மாள் காலனி பகுதியில் முழங்கால் அளவு தேங்கி கிடந்த தண்ணீரில் நடந்து சென்று, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு இருந்த பொதுமக்கள் மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர் அங்கு இருந்து மாலை 5 மணி அளவில் அவர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். 
அமைச்சர்கள்
இந்த ஆய்வினபோது, கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜூதாமஸ்வைத்தியன் உள்பட பலர் உடன் சென்றனர். முன்னதாக விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
----------------
(பாக்ஸ்) ‘செல்பி'யை தவிர்த்த மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு ஆய்வு செய்யும்போது மக்கள் அதிக அளவில் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பெண் முதல்-அமைச்சருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். ஆனால் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வதால் மு.க.ஸ்டாலின், செல்பி எடுப்பதை தவித்தார். மேலும் அந்த பகுதியில் நின்ற குழந்தைகளுடன் உரையாடினார்.
-----------------

Next Story