சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்


சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 2 Dec 2021 9:45 PM IST (Updated: 2 Dec 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

பறவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

பறவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு முகாம்

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறை அரசு அலுவலர்களை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் கிராமப்புறங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முதற்கட்டமாக பொள்ளாச்சி தாலுகாவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 343 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணப்படும். 

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

நவமலை பகுதியில் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து பழங்குடியின மக்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் குறித்து தனியாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கோவை மாவட்டத்தில் இதுவரைக்கும் பறவை காய்ச்சல் கண்டறியப்படவில்லை. 

இருப்பினும் அண்டை மாநிலத்தில் இருந்து தொற்று பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2 பேர் இறந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடு, வீடாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 4 ஆயிரம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ், தாசில்தார் அரசகுமார், தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story