‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 10:12 PM IST (Updated: 2 Dec 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர் 

செம்பட்டியில், பழனி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. அதன் பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் பணியை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதியும் அமைக்க முன்வரவேண்டும்.
-ராஜி, செம்பட்டி.

குழாய் சேதமடைந்ததால் வீணாகும் குடிநீர்

திண்டுக்கல்லை அடுத்த ஸ்ரீராமபுரம் ஊராட்சி தேவநாயக்கன்பட்டியில் உள்ள தெருக்குழாயில் வால்வு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. பொதுமக்களும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தனத்துரை, தேவநாயக்கன்பட்டி.

சேதமடைந்த சாக்கடை கால்வாய் 

பெரியகுளம் தாலுகா வாடிப்பட்டி இந்திரா காலனியில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிச்சாமி, வாடிப்பட்டி.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் 

நத்தத்தில் உள்ள முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் மாடுகளை சுற்றித்திரிய விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், நத்தம்.

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

தேனியை அடுத்த கொடுவிலார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகானந்தன், கொடுவிலார்பட்டி.

Next Story