முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
தேனி:
142 அடியாக நிலை நிறுத்தம்
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை நீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த 30-ந்தேதி அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்துக்கு ஏற்ப கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு முறையாக தகவல் கொடுத்தனர்.
கேரளாவுக்கு நீர் திறப்பு
நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 141.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து கேரள பகுதிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 616 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பாராதவிதமாக கன மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது. இதனால், கேரளாவுக்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
அதிகாலையில் வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி வீதம் கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நீர் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து வழியாக இடுக்கி அணைக்கு சென்றது. அப்போது வல்லக்கடவு பகுதியில் ஆற்றின் கரையோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
முன்னறிவிப்பு
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகள் முன்னறிவிப்பு செய்யவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பகலில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு சுமார் 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.
தமிழக அதிகாரிகள் முறையான முன்னறிவிப்பு கொடுக்காமல் கேரளாவுக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விட்டதாக கேரளாவை சேர்ந்த சில அமைப்பினரும், சில அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஸி அகஸ்டினும் இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, தமிழக அரசு தரப்பில் முறையான தகவல் வரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
முறையான தகவல்
அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதில் இருந்து 142 அடியை எட்டியது வரை பல கட்டமாக இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 142 அடியை எட்டியபோது இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்யும் போது நீர்வரத்து அதிகரித்தால் 142 அடிக்கு மேல் நீர் தேக்க இயலாது. அது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியதாகி விடும். எனவே, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. முறையாக தகவல் கொடுக்கவில்லை என்று கூறுவது பொய் குற்றச்சாட்டு.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்க 13 மதகுகள் உள்ளன. இவற்றில் இருந்து ஒரே நேரத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேற்ற முடியும். அவ்வாறு வெளியேற்றும் தண்ணீர் பாய்ந்தோடும் அளவுக்கு தான் அந்த ஆறு உள்ளது. ஆற்றின் பரப்பளவை வைத்து பார்க்கும் போது 8 ஆயிரம் கன அடி தண்ணீர் என்பதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆற்றுக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்களை இடுக்கி மாவட்ட நிர்வாகம் முறையாக வெளியேற்றி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அலட்சியம்
142 அடியாக நீர்மட்டம் நீடிப்பதால் கன மழை பெய்தால் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அலட்சியத்தின் வெளிப்பாடாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட போதிலும் ஆற்றின் கரையோர மக்கள் வெளியேற்றப்படாமலும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படாமலும் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story