‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 12:14 AM IST (Updated: 3 Dec 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘புகார் பெட்டி’க்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மருவத்தூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் அதிகமாக பரவுவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஆடு மற்றும் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
முள்ளூர் சுரேஷ், பெரம்பலூர்.
பாதாள சாக்கடை மூடி மூடப்படுமா?
திருச்சி மாவட்டம் வள்ளலார் தெரு, கிழக்கு குறிஞ்சி நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியை மூடாமல் ஊழியர்கள் சென்று விட்டனர். இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, வள்ளலார் தெரு, திருச்சி.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
புதுக்கோட்டை தாலுகா வடவாளம் ஊராட்சி இச்சடி கிராமத்தில் இருந்து கும்மிப்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையூறாக ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது.
லலிதா, புதுக்கோட்டை.
விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நெடுஞ்சாலை துறையால் ஒரே இடத்தில் 3 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் மதுபிரியர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேகத்தடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுல், அரியலூர்.
சேறும், சகதியுமான பஸ் நிறுத்தம்
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்திற்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மினி பஸ்களும், அரசு பஸ்களும் வந்து செல்கின்றன. பஸ் நிறுத்தம் அருகாமையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருப்போர் சாலைகளில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா, அரியலூர் மாவட்டம்.
இருளில் மூழ்கிய கடைவீதி
கரூர் மாவட்டம் கடவூர் தாலூகா தரகம்பட்டி கடைவீதியில் உள்ள தெருவிளக்கு பழுதடைந்து இருப்பதால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லலிதா குமாரி, கரூர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆளிபட்டியில் பெய்து வரும் தொடர் மழையால் இ்ங்குள்ள சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அரசு தொடக்கப்பள்ளி முன்பு தேங்கி நிற்கும் மழைநீரால் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகரெத்தினம், ஆளிபட்டி, திருச்சி.
சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் பாலக்கரை ஜெயில் பேட்டையில் குடிசை மாற்று வாரியம் 19-வார்டில் பாதளசாக்கடையில் மனித கழிவு கலக்கிறது. மேலும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வள்ளி, பாலக்கரை, திருச்சி.


Next Story