சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடை பெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், தேன் போன்ற அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆண்டிமடம் விளந்தை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story