நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம்


நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம்
x
தினத்தந்தி 3 Dec 2021 1:29 AM IST (Updated: 3 Dec 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

போதிய வசதியில்லாததால் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் இடநெருக்கடி ஏற்படுகிறது.

பெரம்பலூர்:

2 தளங்களை கொண்டது
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ.68 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த நூலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அப்போது திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 தளங்களை கொண்ட நூலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் நாளிதழ்கள், புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு வாசகர்கள் நாளிதழ்கள், புத்தகங்களை வாசித்து செல்கின்றனர். 1-வது தளத்தில் மத்திய-மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் படிப்பதற்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மாணவ-மாணவர்கள் குறிப்பேடுத்து படித்து வருகின்றனர். 2-வது தளத்தில் நூலகத்தின் அலுவலகம் செயல்படுகிறது. 
போதிய இடவசதி இல்லை
தினமும் நூலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வந்து புத்தகங்களை படித்து செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் நூலகத்திற்கு வருகின்றனர். இதனால் நூலகம் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.
ஆனால் தற்போது புத்தகங்களை வைக்க போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியில் நூலகம் தவித்து வருகிறது. இட நெருக்கடியில் வாசகர்கள் அமர்ந்து படித்து செல்கின்றனர். மேலும் இட நெருக்கடியால் புதிய புத்தகங்கள் நூலகத்தில் தரைத்தளத்தில் இருந்து மேலே உள்ள 2 தளங்களுக்கு செல்லும் படிக்கட்டுகளின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது புத்தக பைகளை வைக்க இடமில்லாமல் படிக்கட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தக பார்சல்கள் மீது வைத்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கூடுதலாக துணை கட்டிடம் ஒன்று கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வாசகர்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story