தஞ்சையில் தொழிலாளர்கள் மறியல்
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி தஞ்சையில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 60 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி தஞ்சையில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 60 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
கட்டுமான தொழிலாளர்கள்
தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை கட்டுமான தொழிலாளர்கள் தஞ்சை இர்வின்பாலத்தில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி மறியல் செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
இந்த போராட்டத்துக்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர்கள் பேர் நீதி ஆழ்வார், கல்யாணி, அன்பு, செங்குட்டுவன், மில்லர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
கட்டுப்படுத்த வேண்டும்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். பணப்பயன்களை பெறுவதற்கு தொழிலாளர் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000, பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். இயற்கை மரணம் நிவாரணம் ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பிரசவகால நிதி, கருச்சிதைவு நிதியை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
110 பேர் கைது
கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஊர்வலம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்த போது சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், மணிமாறன், மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ், லெட்சுமணன், தங்கையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story