தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 1:52 AM IST (Updated: 3 Dec 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வேளாண்மை அலுவலக கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்து கொசுக்கள் மற்றும் விஷ பூச்சிகள் வாழும் இடமாக மாறி உள்ளது. மேலும் கட்டிடத்தின் அருகில் மரம் முளைத்து கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே பாலக்கோடு வேளாண்மை அலுவலக கட்டிடம் அருகில் வளர்ந்திருக்கும் மரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பாலக்கோடு, தர்மபுரி.

அடிப்படை வசதிகள் வேண்டும்
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அவுசிங் போர்டு பகுதி அக்ரி நகர் 3-வது தெருவில் 30 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
- ஊர்பொதுமக்கள், அக்ரி நகர், தர்மபுரி.

ஆபத்தான மின்கம்பம்
சேலம் வெள்ளக்கல்பட்டி மின்சார வாரியம் அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் உடைந்து மிகவும் ஆபத்தான  நிலையில் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் விரைவில் 
நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வெள்ளக்கல்பட்டி, சேலம்.

வீணாகும் குடிநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி மார்க்கெட் சர்வீஸ் ரோடு அட்கோ போலீஸ் நிலையம் அருகில் குடிதண்ணீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது. மேலும் பாஸ்கர்தாஸ் நகரில் இருந்து கழிவுநீர் சர்வீஸ் ரோட்டிலேயே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பஸ் நிறுத்தம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எப்போதும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறுவதால் சாலை  குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பத்தலப்பள்ளி, ஓசூர்.

மூடப்படாத பாதாள சாக்கடை
சேலம் அழகாபுரம் எல்லம்மாள் காலனியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை பணிக்காக திறக்கப்பட்ட குழிகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். எனவே விபத்துக்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை குழியை மூடி போட்டு சரி செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், அழகாபுரம், சேலம்.

வேகத்தடை வேண்டும்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜக்கசமுத்திரம்-பொம்மனூர் செல்லும் தார் சாலையில் அரசு மருத்துவமனை, அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையம், ரேஷன் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.  எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த ஜக்கசமுத்திரம்-பொம்மனூர் செல்லும் தார் சாலையில் ஆங்காங்கே சிறு சிறு வேகத்தடை அமைத்துத் தர வேண்டும்.
-ஊர்மக்கள், ஜக்கசமுத்திரம், தர்மபுரி.

ஆபத்தான கிணறு
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா வங்களியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு திறந்த நிலையில் காணப்படுகிறது. இதன் அருகில் பள்ளி மாணவர்கள் நின்று விளையாடுகின்றனர். திடீரென யாராவது தவறி கிணற்றுக்குள் விழ வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த கிணற்றை மூட வேண்டும். இல்லையென்றால் கிணற்றுக்கு மூடி போட வேண்டும்.
-ஏ.உதயநிதிசரவணன், வங்களியூர், சேலம்.


Next Story