மாவட்ட செய்திகள்

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட டாக்டருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று + "||" + doctors primary contacts 5 persons affected for corona

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட டாக்டருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட டாக்டருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட டாக்டருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட டாக்டருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

மந்திரி சுதாகர் பேட்டி

தென்ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் பாதிப்பு பெங்களூருவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த முதியவர், மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆவார். 
இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வைரஸ் பாதிப்பு இல்லை

பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் 66 வயது முதியவர், மற்றொருவருக்கு 46 வயது. 46 வயதானவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். 

அந்த 66 வயது உடையவர் கடந்த 20-ந் தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் ’பெங்களூருவுக்கு  வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானது. 
இதையடுத்து அவர் ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வைரஸ் பாதிப்பு இல்லை என்ற தெரியவந்தது.

முதியவர் துபாய் சென்றார்

இதையடுத்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 27-ந் தேதி துபாய் வழியாக தென்ஆப்பிரிக்கா சென்றார். துபாய் புறப்படுவதற்கு முன்பு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது. அவருடன் தொடர்பில் இருந்த 264 பேரை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்தோம். அதில் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. பெங்களூருவை சேர்ந்த 46 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி கண்டறியப்பட்டது.

மரபணு பகுப்பாய்வு

டாக்டரை தாக்கிய வைரஸ் சற்று வேறுபட்டு இருந்தது. இதையடுத்து அவரது சளி மாதிரியும் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பினோம். அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் பெங்களூருவை சேர்ந்தவர். அவர் வெளிநாடு உள்பட எங்கும் பயணிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எவ்வாறு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

மேலும் டாக்டருடன் 218 பேர் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் சளி மாதிரிகளும் மரபணு வரிசை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்த டாக்டருடன் சேர்த்து 6 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு 

அவர்களின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவாக தான் உள்ளது. பெங்களூருவில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கண்காணிப்புகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். ஒமைக்ரான் வைரசை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.