நகை வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
பெங்களூருவில் காரை வழிமறித்து நகை வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். அவர்களை தடுக்க முயன்ற வியாபாரியின் உறவினரிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
பெங்களூரு: பெங்களூருவில் காரை வழிமறித்து நகை வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். அவர்களை தடுக்க முயன்ற வியாபாரியின் உறவினரிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
காரை வழிமறித்தனர்
பெங்களூரு விஜயநகர் அருகே ஆர்.பி.சி. லே-அவுட்டில் வசித்து வருபவர் பிரமோத். இவர், பீனியா 2-வது ஸ்டேஜ், ஹெக்கனஹள்ளி மெயின் ரோட்டில் தங்க நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரமோத் கடைக்கு, அவரது சித்தப்பா நேமிநாத் வந்திருந்தார். பின்னர் இரவில் வியாபாரம் முடிந்ததும், தங்க நகைகள் விற்பனை மூலம் கிடைத்த ரூ.2 லட்சத்தை எடுத்து கொண்டு பிரமோத் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் நேமிநாத் சென்றார்.
காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கதகட்டே, மத்தூரம்மா லே-அவுட், 7-வது கிராசில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்மநபர்கள், பிரமோத் காரை வழிமறித்தார்கள். பின்னர் அவரிடம், காரை எதற்காக அதிவேகமாக ஓட்டுகிறீர்கள், எங்களது மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல காரை ஓட்டிச் சென்றது ஏன்? என்று கேட்டு மர்மநபர்கள் பிரமோத்திடம் தகராறு செய்தார்கள்.
பணம், தங்க சங்கிலி கொள்ளை
பின்னர் திடீரென்று பிரமோத்தின் கார் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த பணப்பையை மா்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நேமிநாத், மர்மநபர்களிடம் கார் கண்ணாடியை உடைத்தது பற்றி கேட்டு தகராறு செய்ததுடன் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மா்மநபர்கள் பிரமோத்தை தாக்கியதுடன், நேமிநாத் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் சென்று விட்டனர்.
பிரமோத் காருக்குள் ரூ.2 லட்சம் இருந்த பணப்பையை வைத்திருந்தார். அந்த பணப்பையை தான் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story