சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய தம்பதி
நித்திரவிளை அருகே வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்ததை கண்டித்து வயதான தம்பதியினர் சாலையில் படுத்து, உருண்டு போராட்டம் நடத்தினர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்ததை கண்டித்து வயதான தம்பதியினர் சாலையில் படுத்து, உருண்டு போராட்டம் நடத்தினர்.
கால்நடை கழிவுகள்
நித்திரவிளை அருகே உள்ள பானந்தோப்பு குளம் பகுதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது70). இவர் அந்த பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உறவினர் ஒருவர் மாட்டு பண்ணை வைத்துள்ளார். அந்த பண்ணையில் இருந்து வெறியேறும் கழிவுகளை கோபாலனின் வீட்டை நோக்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் வீட்டின் உட்புறமாக பாய்ந்து அந்த பகுதியில் உள்ள சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
போராட்டம்
இந்தநிலையில், வீட்டுக்குள் கழிவுநீர் புகுவதை கண்டித்து நேற்று கோபாலனும், அவரது மனைவியும் வீட்டின் முன்பக்கம் உள்ள சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தம்பதிக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒருகட்டத்தில் வயதான தம்பதியினர் இருவரும் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் மற்றும் ஏழுதேசம் பேரூராட்சி செயல்அலுவலர் ஜான்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்றி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story