தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்
தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் ஒரே நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதம் ஆகியுள்ளபோதிலும் இன்னமும் அ.தி.மு.க.வைத்தான் குறைசொல்லி வருகிறார்கள். அவர்களுக்கு அரசு நிர்வாகம் மீது துளியும் கவனம் இல்லை.
அ.தி.மு.க. மீதான பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்க முடியாது. இதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைக்கு முதல்-அமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது.
அச்சுறுத்தப்படுகிறார்கள்
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று கொண்டிருக்கும்போதே அதன் தலைவர் கந்தசாமி, முதல்-அமைச்சரை ஏன் சந்தித்தார்? வேலுமணியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் இலக்கு. ஆனால் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வேலுமணி கைது செய்யப்படவில்லை. இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் அனைவரும் மிரட்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள்.
நேற்றைய தினம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மிகவும் நேர்மையானவர். ஆட்சி மாற்றத்திற்கு பின் அவரை ராஜினாமா செய்ய இந்த அரசு வற்புறுத்தியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு ரூ.11 லட்சம் பணமும், 4 கிலோ தங்கம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குக்காக வெங்கடாசலம் அச்சப்படவில்லை, அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர் பகலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு என்ன நடந்தது?
தற்கொலை சம்பவங்கள்
ஒரு மாதம் முன்பு தொழிற்கல்வித்துறைக்கு கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் வீட்டில் சோதனை நடைபெற்று ரூ.2¾ கோடி கைப்பற்றப்பட்டது. ஆனால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டபின்பு முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த வற்புறுத்தப்பட்டு, அவர் மறுத்ததால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அதற்கு வெங்கடாசலம் மறுத்ததால் அச்சுறுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? எப்போதெல்லாம் தி.மு.க.வினர் மீது குற்றம் சாட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. உதாரணமாக அண்ணாநகர் ரமேஷ், சாதிக்பாட்சா என உதாரணம் சொல்லலாம்.
சி.பி.ஐ. விசாரணை தேவை
மரக்காணத்தில் நடந்த ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டப்பட்டு, தோல்வியுற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த அரசின் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் மர்ம மரணத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அரசில் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். இந்த அரசு அதிகாரிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story