3,900 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்


3,900 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2021 7:56 PM IST (Updated: 3 Dec 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்திய 3,900 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்

கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்திய 3,900 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நகர பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு காய்கறி மூட்டைகள் இருப்பதை கண்டனர்.

புகையிலை பொருட்கள்

இதைத்தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது மூட்டைகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்ட 3 மூட்டைகள் இருப்பதை கண்டனர்.

பின்னர் அந்த மூட்டைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மூட்டைக்குள் இருந்த 3,900 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக காய்கறி கடை வியாபாரி செல்வகுமாரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளுக்கு இடையே புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை (வயது 45) கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, சட்டத்துக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.


Next Story