கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
பழனியில் சுற்றுலா பஸ்நிலையத்தில் தரைப்பாலம் சேதம் அடைந்தது.
பழனி:
பழனி அருள்ஜோதி வீதியில் சுற்றுலா பஸ்நிலையம் உள்ளது. இங்கு, பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேன், பஸ், கார்களை நிறுத்துகின்றனர். இந்த பஸ்நிலையத்துக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென தரைப்பாலம் சேதமடைந்தது. இதில் பாலத்தின் மையப்பகுதியில் கான்கிரீட் கம்பிகள் தெரியும் வகையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் பஸ்நிலையத்துக்குள் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து வாகனங்களை கிழக்கு கிரிவீதியில் உள்ள சுற்றுலா பஸ்நிலையத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பல கோடி ரூபாய் மதிப்பில் பழனி நகரில் சாலை, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் எவ்வித பணிகளும் முறையாக நடைபெறவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story