உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே கூடுதல் பஸ்நிலையம் அமைக்க கட்டிட கட்டுமானப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே கூடுதல் பஸ்நிலையம் அமைக்க கட்டிட கட்டுமானப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
x
தினத்தந்தி 3 Dec 2021 9:41 PM IST (Updated: 3 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே கூடுதல் பஸ்நிலையம் அமைக்க கட்டிட கட்டுமானப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

உடுமலை, 
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே கூடுதல் பஸ்நிலையம் அமைக்க கட்டிட கட்டுமானப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
மத்திய பஸ் நிலையம்
உடுமலை நகரில் மத்திய பஸ்நிலையம் பழனி சாலையில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த பஸ் நிலையம் சிறிது விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பஸ்நிலையத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக மத்திய பஸ் நிலையத்தை ஒட்டி கிழக்குப்புறம் வி.பி.புரத்தில் இருந்த குடிசை வீடுகள் கடந்த சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு குடியிருந்தவர்களுக்கு மாரியம்மன் நகரில் இடம் ஒதுக்கி தரப்பட்டது.
கூடுதல் பஸ் நிலையம்
இதைத்தொடர்ந்து மத்திய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் பஸ் நிலையத்தை அடுத்துள்ள வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதில் இந்த காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியின் மூலம் அந்த காலி இடத்தில் 15 பஸ்கள் நிறுத்துவதற்கான டிரேக் வசதி செய்யப்பட உள்ளது. தரைத்தளத்தில் 8 கடைகள், தகவல் மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, மின் அறை ஆகியவை கட்டப்பட உள்ளது. முதல் தளத்தில் ஹால், பொருட்கள் வைப்பு அறை, இ-டிக்கெட் பதிவு அறை, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்கும் அறை ஆகியவை கட்டப்பட உள்ளது. இது தவிர கூடுதல் பஸ் நிலைய வளாகத்தில் தனியாக ரெஸ்டாரண்ட் (உணவகம்) கட்டப்படுகிறது.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
இந்த கூடுதல் பஸ் நிலையம் அமைக்க கட்டிட கட்டுமான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி கூடுதல் பஸ்நிலைய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலை வகித்தார்.
 விழாவில் உடுமலை ஆர். டி.ஓ.சி.கீதா, தாசில்தார் வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.மு.க.தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் எம்.மத்தீன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முபாரக்அலி, நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன், பொறியாளர் மோகன், உதவிப்பொறியாளர் மாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குறைகேட்கும் முகாம்
 உடுமலை நகராட்சி பகுதியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் வகையில் மக்களை நாடிடும் என்ற மக்கள் சபை குறைகேட்கும் முகாம் உடுமலை அனுஷம் நகரில் உள்ள வாணி மஹால், தளி சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் தேஜஸ் மஹால் ஆகிய 2 இடங்களில் நேற்று நடந்தது.
 இந்த முகாம்களில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.  முகாம்களில் கலெக்டர் எஸ்.வினீத், உடுமலை ஆர்.டி.ஓ.சி.கீதா, தாசில்தார் வி.ராமலிங்கம், நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story