அரசு பணி தேர்வுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி வேளாண் கல்லூரியில் படித்த மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு


அரசு பணி தேர்வுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி வேளாண் கல்லூரியில் படித்த மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 10:09 PM IST (Updated: 3 Dec 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

அரசு பணி தேர்வுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி வேளாண் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலைநகர், 

கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டிப்ளமோ படித்து வருகிறார்கள். அந்த வகையில் இங்கு டிப்ளமோ படித்து முடித்த மாணவ, மாணவிகள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பணிக்காக தமிழக அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவர்களை வருகிற 8, 9, 10 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கும் கலந்தாய்விற்கு அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

காத்திருக்கும் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் முன்பு திரண்டனர். 
பின்னர் அவர்கள் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற எங்களை அரசு பணி தேர்வுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கக்கோரி இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தை  தொடங்கினார்கள். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கண்டன உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து ஏ.டி.கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் டிப்ளமோ பயின்ற மாணவர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அங்கீகரிக்கவில்லை.
கடந்த ஆண்டில் இந்த மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கலந்தாய்விற்கு அழைக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் அனுமதிக்க கோரி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார். 

துணைவேந்தர் பேச்சுவார்த்தை

இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், வேளாண் புல முதல்வர் சுந்தர வரதராஜன் ஆகியோர் தலைமையிலான பல்கலைக்கழக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை இரவு சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கை குறித்து உயர்கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
 இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story