போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி; ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் கைது


போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி; ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் கைது
x
தினத்தந்தி 3 Dec 2021 10:37 PM IST (Updated: 3 Dec 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நிலம் விற்பது தொடர்பாக போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

தேனி:
தேனியில் நிலம் விற்பது தொடர்பாக போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் கைது செய்யப்பட்டார். 
நிலம் விற்க முன்பணம்
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி அனுக்கிரகா நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் வடபுதுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் நிர்வாக இயக்குனராக உள்ளார். அவருக்கு சொந்தமான நிலம் சங்கராபுரத்தில் உள்ளது. அந்த நிலத்தை தேனி நகர் பெரியகுளம் சாலையை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவர் வாங்குவதற்கு முன்வந்தார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் முன்பணத்தை சந்திரசேகரனிடம் கொடுத்தார். பின்னர் அந்த நிலத்தை கிரையம் முடிக்காததால் முன்பணமாக கொடுத்த தொகையை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். 
இதற்கிடையே சந்திரசேகரனின் மில்லுக்கு சென்ற சந்தனபாண்டியன், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றிய மணவாளன் மூலமாக நிலம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 50 லட்சத்தை கொடுத்ததாகவும், அந்த நிலத்தை தன்னிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பெறவில்லை என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.
போலி ஒப்பந்தம்
அவரிடம் விசாரித்தபோது, நிலம் விற்பது தொடர்பாக சந்திரசேகரன் கையொப்பமிட்டதாக தயாரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்த பத்திரத்தை காட்டி, அதை மணவாளன் தன்னிடம் கொடுத்ததாக சந்தனபாண்டியன் கூறினார். விசாரணையில் அது போலியான ஒப்பந்த பத்திரம் என்று தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில், போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ய முயன்றதாக சந்தனபாண்டியன், மணவாளன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சந்தனபாண்டியனை சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே மணவாளன் ஆண்டிப்பட்டி மண்டல துணை தாசில்தாராக மாற்றப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் மணவாளனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் போலி ஆவணம் தயாரித்தது தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மோசடி வழக்கில் துணை தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story