போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை எதிரொலியாக போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி:
பலத்த மழை எதிரொலியாக போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைப்பாதையில் மண்சரிவு
தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் போடிமெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போடிமெட்டு மலைப்பாதையில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மண்சரிவு மற்றும் பாறைகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி முதல் தமிழகம், கேரளா இடையே அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் போடிமெட்டு மலைப்பாதையில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. இருப்பினும் கடந்த 1-ந்தேதி போடிமெட்டு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது மண்சரிவு உடனுக்குடன் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்துக்கு தடை இல்லாமல் இருந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போடிமெட்டு மலைப்பாதையில் பெய்த பலத்த மழையால், 8-வது கொண்டை ஊசி வளைவில் புலியூத்து என்ற பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. மேலும் பெரிய பாறை ஒன்றும் சாலையில் விழுந்தது. இதனால் போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்சரிவை சரி செய்தனர். சாலையில் விழுந்த மரங்களையும், பாறையையும் அகற்றினர். சுமார் 6 மணி நேர சீரமைப்பு பணிக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கம்பம்மெட்டு மலைப்பாதை
இதேபோல் கம்பம்மெட்டு மலைப்பாதையில் உள்ள 7-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மாலை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்கு அந்த மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story