பேரணாம்பட்டு, ஆம்பூர் பகுதியில் மீண்டும் நில அதிர்வு
பேரணாம்பட்டு மற்றும் ஆம்பூர் பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர். அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு மற்றும் ஆம்பூர் பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர். அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நில அதிர்வு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக்கணவாய், கவராப்பேட்டை, டி.டி.மோட்டூர், பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 10.30, 11 மணி 11.35 ஆகிய நேரங்களில் 3 முறை பயங்கர சத்துத்துடன் ஏற்பட்ட நிலஅதிர்வால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து தெருவில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீடுகளில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தோம். நிலஅதிர்வு சுமார் 5 வினாடிகள் நீடித்தது. எனினும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்றனர்.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் வடிவேல் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று கிராம மக்களிடம் விசாரித்தனர்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம், அத்திமாகுலபல்லி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அதிகாலை சுமார் 5.12 மணி அளவில் பயங்கர சத்தம் மற்றும் அதிர்வுகள் உணரப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் சிலர் தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டிலிருந்து அலறியடித்து தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இதேபோல் கடந்த 28-ந் தேதி ஆம்பூர் அடுத்த காரப்பட்டு காப்புக் காட்டை ஒட்டிய கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. காரப்பட்டு காப்பு காட்டில் ரிக்டர் அளவில் 3.16-ஆக நிலஅதிர்வு பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 27.10.2017 அன்றும் அத்திமாகுலபல்லியில் இதுபோன்ற நிலஅதிர்வால் பல்வேறு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே குடியாத்தம் பகுதியிலும் கடந்தசில நாட்களுக்கு முன்பு இதேபோன்று நிலஅதிர்வு ஏற்பட்டது. தற்போது பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால் இது குறித்து ஆய்வு நடத்தி நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story