கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்


கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Dec 2021 10:58 PM IST (Updated: 3 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருவாரூரில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்;
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருவாரூரில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கட்டுமான பொருட்கள்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம், இதர பண பயன்களை உயர்த்தி வழங்க  வேண்டும். ஆன்லைன் பதிவுடன், நேரடி பதிவை அமல்படுத்த வேண்டும். நல வாரிய கூட்டத்தை 2 மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும். இலவச வீடு, வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
பண்டிகை கால போனஸ்
அதன்படி திருவாரூர் தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பண்டிகை கால போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த  அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story