மீனவரின் பிணத்துடன் 2 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த வாலிபர் மீட்பு
கோவா ஆழ்கடலில் புயலால் விசைப்படகு கவிழ்ந்ததால் சக மீனவர் பிணத்துடன் 2 நாட்கள் தத்தளித்த வடமாநில வாலிபரை குமரி மீனவர்கள் மீட்டனர். மேலும் 8 பேரின் கதி என்ன? என்று தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொல்லங்கோடு,
கோவா ஆழ்கடலில் புயலால் விசைப்படகு கவிழ்ந்ததால் சக மீனவர் பிணத்துடன் 2 நாட்கள் தத்தளித்த வடமாநில வாலிபரை குமரி மீனவர்கள் மீட்டனர். மேலும் 8 பேரின் கதி என்ன? என்று தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
புயல் எச்சரிக்கை
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்த பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு புயல் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனால், மாராட்டிய மாநிலம் விஜயதுர்கா என்ற இடத்தில் பாதுகாப்பாக கரை ஒதுங்கி இருந்தனர். புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டதையடுத்த நேற்று கோவா ஆழ்கடல் பகுதி வழியாக தேங்காப்பட்டணத்திற்கு கரை திரும்பி கொண்டிருந்தனர்.
கடலில் மிதந்த பிணம்
அப்போது கோவா கடற்கரையில் இருந்து சுமார் 40 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆழ்கடலில் ஒரு பிணம் மிதந்து ெகாண்டிருப்பதை கண்டனர். உடனே, குமரி மீனவர்கள் பிணத்தின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, பிணத்தின் அருகே 30 வயதுடைய வாலிபர் ஒருவர் உடலில் மிதவைகளை கட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த குமரி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் விரைந்து செயல்பட்டு கடலில் தத்தளித்த வாலிபரை பத்திரமாக மீட்டு படகில் ஏற்றினர். தொடர்ந்து அவருக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை கொடுத்தனர். அந்த வாலிபர் இந்தியில் பேசினார். இதனால், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
படகு கவிழ்ந்தது
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-
இந்த வாலிபர் உள்பட 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆழ்கடலில் வீசிய புயலில் இவர்களது படகு கவிழ்ந்தது. இதில் 10 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் தற்போது மீட்கப்பட்ட வாலிபர் தனது உடலில் மிதவைகளை கட்டிக்கொண்டு கடந்த 2 நாட்களாக தண்ணீரில் தத்தளித்துள்ளார். இவருடன் வந்த மற்றொரு மீனவர் இறந்தார். அவரது பிணம் கடலில் மிதந்து கொண்டிருந்தது. மற்ற 8 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மேலும், இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
கடலோர காவல்படைக்கு தகவல்
இதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் கோவா கடலோர காவல்படைக்கு தகவல் ெகாடுத்தனர். அவர்கள் விசைப்படகில் ஆழ்கடலில் விரைந்து சென்று குமரி மீனவரின் படகில் இருந்த வடமாநில வாலிபரை மீட்டனர். அவருக்கு முதலுதவி செய்து மருத்துவ சிகிச்சைக்காக கரைப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடலில் மிதந்த பிணத்தையும் கடலோர காவல்படையினர் கைப்பற்றினர்.
தொடர்ந்து படகு கவிழ்ந்ததாக கூறப்படும் இடத்தில் மற்ற 8 ேபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் தேடியும் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
இதற்கிடைேய வடமாநில வாலிபரை மீட்ட தகவலை குமரி மீனவர்கள் கோவா கடலில் இருந்தபடி தூத்தூர் புனித தோமையார் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். கடலில் தத்தளித்த வடமாநில வாலிபரை மீட்ட குமரி மீனவர்களுக்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story