அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2021 7:48 PM GMT (Updated: 3 Dec 2021 7:48 PM GMT)

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாமரைக்குளம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர். இவர் அரியலூர் மாவட்டம் ெஜயங்கொண்டம் அருகே உள்ள ஆயுதக்களம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது வயலில் விவசாய வேலை செய்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள குடிசையில் அவர் குடியிருந்தார். இந்நிலையில் ராமமூர்த்தியின் வயலுக்கு அருகில் உள்ள வயலின் உரிமையாளர் மகன்கள் மற்றும் அவரது தம்பி மகன்கள் எம்ஜிஆர் குடியிருந்த குடிசையை சேதப்படுத்தி, அவரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த எம்ஜிஆர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவர் இது பற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குறிஞ்சி குறவர் இன மக்கள் கழக மாநில தலைவர் உத்தமகுமார் தலைமையில் திரண்டவர்கள், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூலித்தொழிலாளியை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அவரை தாக்கியவர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதரவானவர்கள் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும் இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Next Story