நகைக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
நகைக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் சர்ச் ரோட்டை சேர்ந்த நகைக்கடை அதிபர் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது வீட்டில் இருந்த 103¼ பவுன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த 3 பேர் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
அவர்கள் கடந்த 29-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் 2-வது வார்டு இந்திரா நகரில் அனாதையாக நின்ற கருப்பண்ணனின் காரை கைப்பற்றினர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 ேபரில் வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் இளங்கோ நகரை சேர்ந்த செந்தில்குமார், திருச்சியை சேர்ந்த ஆனந்தன் ஆகிய 2 பேரையும், கொள்ளையடித்த வெள்ளி பொருட்களை விற்பதற்காக வைத்திருந்த செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி, 2-வது மனைவி கவிமஞ்சு ஆகியோரையும் கடந்த 1-ந்தேதி தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவர்களிடம் இருந்து 16 பவுன் நகைகள், 2 கிலோ 400 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பலூர் சங்குப்பேட்டை கம்பன் தெருவை சேர்ந்த ராஜின் மகனும், டிரைவருமான ராஜ்குமாரை (வயது 25) தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story