தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 10 பேர் தலைமறைவு
தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 10 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
பெங்களூரு: தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 10 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்
தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் அந்த வைரஸ் நுழைந்துவிட்டது. அதாவது பெங்களூருவில் டாக்டர் உள்பட 2 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த பலர் தலைமறைவாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தென்ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 15 நாட்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதன்படி அவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
10 பேர் தலைமறைவு
ஆனால் அவர்கள் கொடுத்த முகவரியில் போய் பார்த்தபோது அங்கு 10 பேர் மட்டும் இல்லை என்பது தெரியவந்தது. அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நிலையில் தங்களுக்கும் பாதிப்பு இருக்குேமா என்ற அச்சத்தில் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தேடும் பணி தீவிரம்
இதுகுறித்து சுகாதாரத் துறை மந்திரி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 57 நபர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களில் 10 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் கொடுத்த முகவரியில் அவர்கள் இல்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தலைமறைவாக உள்ள 10 பேரையும் தேடி கண்டுபிடித்து பரிசோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் உதவியுடன் அவர்கள் இன்று (அதாவது நேற்று) இரவு 12 மணிக்குள் கண்டுபிடிக்கப்படுவார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த காலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு தலைமறைவானவர்களை கண்டுப்பிடித்து ஒப்படைப்பதில் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் வெளிநாட்டு பயணிகள் சமூக நலனை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story