ஆத்தூர் அருகே விவசாயியை கொன்று புதைத்த இடத்தை தோண்டுவதில் சிக்கல் கைதான 2 பேரும் வெவ்வேறு பகுதியை காட்டியதால் போலீசார் குழப்பம்
விவசாயியை கொன்று புதைத்த இடத்தை தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கைதான 2 பேரும் வெவ்வேறு பகுதியை காட்டியதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி கொலை
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே அரியாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பு என்ற சுப்பிரமணி (வயது 74). விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சிவகங்கைபுரம் பகுதியில் உள்ளது.
அந்த நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுப்பு கொலை செய்யப்பட்டார். மேலும் சுப்புவின் உடல், அதே பகுதியை சேர்ந்த சக்திவேலு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதைத்த இடம்
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் (34), நரசிங்கபுரம் மீனவர் தெருவை சேர்ந்த அறிவழகன் (31) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சுப்பு கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுப்பு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண போலீசார் முயற்சி மேற்கொண்டனர். பிடிபட்ட 2 பேரையும் அழைத்துக்கொண்டு சக்திவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு சென்றனர்.
முரணான தகவல்
அங்கு பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுப்பு உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை வருவாய்த்துறையின் முன்னிலையில் தோண்டினர். ஓரளவுக்கு தோண்டிய பிறகும் சுப்பு உடல் கிடைக்கவில்லை. பின்னர் ராமதாஸ், அறிவழகன் இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சுப்பு உடல் புதைக்கப்பட்டதாக வெவ்வேறு பகுதியை காட்டினார்கள். இதனால் எந்த இடத்தில் தோண்டுவது என்று போலீசார் குழப்பம் அடைந்தனர். பிடிபட்டவர்களின் முன்னுக்குப்பின் முரணான தகவலால் உடலை தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே உடலை தோண்டும் பணியை போலீசார் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
சிறையில் அடைத்தனர்
மேலும் பிடிபட்ட அறிவழகன், ராமதாஸ் இருவரையும் கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்கள் பிடிபட்டால்தான் சுப்பு புதைக்கப்பட்ட இடம் உறுதியாக தெரிய வரும் என்று போலீசார் நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே தலைமறைவானவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story