விவசாயியை தாக்கி மிரட்டியதாக புகார் தர்மபுரி ஆவின் தலைவர் மீது மேலும் ஒரு வழக்கு
பென்னாகரம் அருகே தாக்கி மிரட்டியதாக விவசாயி அளித்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே தாக்கி மிரட்டியதாக விவசாயி அளித்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
தாக்குதல் புகார்
தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவராக பதவி வகித்து வந்தவர் டி.ஆர்.அன்பழகன். தாளப்பள்ளத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான இவர் மீது 2 வாரங்களுக்கு முன்பு விவசாயி ஒருவரை தாக்கியதாக பென்னாகரம் போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அவரை செய்து கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் பென்னாகரம் தாசம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 35) என்பவர் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் ஆவின் தலைவர் டி.ஆர். அன்பழகன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நான் டிராக்டர் வைத்து விவசாய தொழில் செய்து வருகிறேன். பவளந்தூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த மாதம் 9-ந்தேதி தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர்.அன்பழகன் மற்றும் சிலர் என்னை தாக்கி பெத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு காரில் அழைத்து சென்றனர்.
வழக்குப்பதிவு
அங்கு டிராக்டருக்கு திருட்டு டீசலை வாங்கி பயன்படுத்தியதாக என்னை ஒப்புக்கொள்ளுமாறு கூறி தாக்கினார்கள். பின்னர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். டீசலுக்கான தொகையை ஒரு வாரத்தில் தரவேண்டும். இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். பின்னர் அங்கிருந்து வந்த நான் தாக்குதலில் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் பென்னாகரம் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன்.
என்னை தாக்கி மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பழகனை நேற்று எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
Related Tags :
Next Story