நள்ளிரவில் நடனம் ஆட சொல்லி துன்புறுத்தல்: 3-ம் ஆண்டு மாணவிகள் ‘ராக்கிங்’கால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் ஆதிதிராவிட விடுதி மாணவிகள், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்


நள்ளிரவில் நடனம் ஆட சொல்லி துன்புறுத்தல்: 3-ம் ஆண்டு மாணவிகள் ‘ராக்கிங்’கால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் ஆதிதிராவிட விடுதி மாணவிகள், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 4 Dec 2021 3:44 AM IST (Updated: 4 Dec 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் நடனம் ஆட சொல்லி துன்புறுத்துவதாகவும், 3-ம் ஆண்டு மாணவிகள் ‘ராக்கிங்’கால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்று ஆதிதிராவிட விடுதி முதலாம் ஆண்டு மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

சேலம், 
முதலாம் ஆண்டு மாணவிகள்
சேலம் சங்கர்நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த விடுதியின் முதலாம் ஆண்டு மாணவிகள் 5 பேர், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை  கொடுத்தனர். அந்த மனுவில், விடுதியில் தங்கி இருக்கும் 3-ம் ஆண்டு மாணவிகள் தங்களை ராக்கிங் செய்வதாகவும், இதுெதாடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மன உளைச்சல்
பின்னர் அந்த மாணவிகள் கூறுகையில், விடுதியில் தங்கி இருக்கும் 3-ம் ஆண்டு கல்லூரி மாணவிகள் சிலர், எங்களை கடந்த சில நாட்களாக ராக்கிங் செய்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நாங்கள் தூங்கும் போது கதவை தட்டுவது, பாட்டு பாட சொல்லியும், நடனம் ஆட சொல்லியும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் முன்பு நாங்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றனர். அதை மீறினால் செல்போனை உடைத்து விடுவதாகவும், சார்ஜரை தூக்கி வீசி விடுவதாகவும் எங்களை மிரட்டுகின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே இதில் கலெக்டர் நேரடியாக தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.
நேரில் விசாரணை
இந்த புகார் குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரளா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரளா கூறும் போது, முதலாமாண்டு மாணவிகள் புகார் கூறியதை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்தினோம். இனிமேல் இதுபோன்ற புகார்கள் வரக்கூடாது என்று மாணவிகளை கண்டித்துள்ளோம் என்றார்.


Next Story