தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற தி.மு.க. அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி


தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற தி.மு.க. அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
x
தினத்தந்தி 4 Dec 2021 3:44 AM IST (Updated: 4 Dec 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற தி.மு.க. அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம், 
ஆலோசனை கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. 
இந்த கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 
பேட்டி
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை மந்திரியும், மாநில தேர்தல் குழு தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சி தயாராக உள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராமல் தமிழை வைத்து தி.மு.க. பிழைப்பு நடத்தி வருகிறது. வள்ளுவர் பிறந்தநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற தி.மு.க. அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பாரம்பரியம் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றுவதற்காக மக்கள் யாரும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை.
போதை மாநிலம்
தமிழகத்தில் நீடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் இளைஞர்கள் தடம்மாறி போவதற்கு தமிழகம் போதை மாநிலமாக மாறி வருவதே காரணம். மாநிலத்தின் தலைநகரான சென்னையில் சர்வசாதாரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
ஆட்சி பொறுப்பேற்ற சில மாதத்திற்குள்ளேயே தமிழகத்தை எவ்வளவு சீரழிக்க முடியும் என்பதை தி.மு.க. அரசு காண்பித்துள்ளது. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு படை அமைத்து தமிழகத்தில் போதை பொருள் வினியோகத்தை தடுத்து இளைஞர்களை காக்க வேண்டும்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம். மாநில அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பொருளாதார நெருக்கடி உள்ளது. மத்திய அரசு எந்த வகையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் விளக்கமாக சொன்னால் நல்லது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story