திசையன்விளை அருகே அதிசய கிணறு பகுதியில் பூமிக்கு அடியில் நீரோடைகள் இருக்க வாய்ப்பு புவியியல் துறை பேராசிரியர் தகவல்
பூமிக்கு அடியில் நீரோடைகள் இருக்க வாய்ப்பு
திசையன்விளை:
திசையன்விளை அருகே அதிசய கிணறு பகுதியில் பூமிக்கு அடியில் நீரோடைகள் இருக்க வாய்ப்பு உள்ளது என்று புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தெரிவித்தார்.
அதிசய கிணறுகள்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால், அதன் இடது, வலதுபுற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இடதுபுற கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் வந்து நிரம்பியது. தொடர்ந்து தண்ணீரானது ஆனைகுடி படுகைக்கும், அதன் அருகில் உள்ள 2 கிணறுகளுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த கிணறுகளுக்கு பல மாதங்கள் தண்ணீர் சென்றாலும் நிரம்பியதில்லை.
இந்த கிணறுகளுக்கு தண்ணீர் செல்வதின் மூலம் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். எனவே அந்த அதிசய கிணறுகளை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் அந்த அதிசய கிணறுகளை சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தனர்.
பின்னர் பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் கூறியதாவது:-
நீரோடைகள் இருக்க வாய்ப்பு
முதலில் கிணற்று தண்ணீர் மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் தண்ணீர் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் எப்படி இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்தோம்.
அதிசய கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் பூமிக்கு அடியில் நீரோடைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. வெள்ளநீர் வீணாகாமல் எப்படி சேமிக்கலாம் என்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story