தாமிரபரணி வெள்ளத்தால் உறைகிணறுகள் பாதிப்பு குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


தாமிரபரணி வெள்ளத்தால் உறைகிணறுகள் பாதிப்பு குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Dec 2021 4:08 AM IST (Updated: 4 Dec 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

நெல்லை:
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உறைகிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
உறைகிணறுகள்
நெல்லையில் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போதும் நீரோட்டம் அதிகமாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றுக்குள் நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வெள்ளப் பெருக்கால் கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறை கிணறுகளில் மணல் புகுந்து நீர் உறிஞ்சும் மோட்டார்களை மூழ்கடித்து உள்ளது. மின் இணைப்பு வயர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. மின் மோட்டார் பழுது ஏற்பட்டதாலும் உறைகிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு
இதனால் அங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நெல்லை மாநகரில் தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
வீட்டு இணைப்புகளில் தண்ணீர் வராத நிலையில் பிரதான குழாய்கள் அமைந்துள்ள மேலநத்தம், கருங்குளம் பகுதிகளில் குழாய்களில் வடியும் கசிவு நீரை பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து குடங்களில், கேன்களில் பிடித்து செல்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறார்கள். ஆனால் அந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடர் மழையால் நீரேற்று நிலையங்களில் மோட்டார்கள் பழுதாகி உள்ளன. தற்போது வெள்ளம் குறைந்துள்ளது. எனவே மோட்டார்களை சரி செய்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Next Story