முகநூல் மூலம் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி பெண் கைது


முகநூல் மூலம் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி பெண் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 12:11 AM GMT (Updated: 4 Dec 2021 12:11 AM GMT)

முகநூல் வழியாக அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்த மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 25). இவர் மணிமுத்தாறு பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கடலோர காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆவடி ஆனந்தா நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 26) என்ற பெண் பாரதிராஜாவுக்கு முகநூலில் வேறு ஒரு பெயரில் அறிமுகமாகி உள்ளார்.

மருத்துவ மாணவி என்று கூறி பழகி வந்த ஐஸ்வர்யா செல்போனில் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பாரதிராஜாவிடம் கூறியுள்ளார்.

அவரின் மயக்கும் குரலால் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் பாரதிராஜாவும் தொடர்ந்து ஐஸ்வர்யாவுடன் பேசி வந்துள்ளார்.

பண மோசடி

ஒரு கட்டத்தில் தனக்கு படிப்பு செலவுக்கு பணம் தேவை என்றும், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் பணம் தேவை என்றும் பல்வேறு காரணங்களை சொல்லி சிறுக, சிறுக ரூ.14 லட்சம் வரை ஐஸ்வர்யாவின் தந்தை பழனி மற்றும் அவரது தாயார் லதா ஆகியோரின் வங்கி கணக்கில் பாரதிராஜவை அனுப்ப சொல்லி ஏமாற்றியுள்ளார்.

அதேபோன்று பாரதிராஜாவின் பெரியப்பா மகன் மகேந்திரன் என்பவருக்கு வேறொரு முகநூல் கணக்கு மூலம் ஐஸ்வர்யா அறிமுகமாகி பழகி அவரிடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆசை வார்த்தை கூறி படிப்பு செலவுக்கும் பணம் தேவை என்று சொல்லி அவ்வப்போது மொத்தம் ரூ.20 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியுள்ளார்.

பெண் கைது

தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக பாரதிராஜாவிடம் பேசி வந்த ஐஸ்வர்யா பேசுவதை நிறுத்தியதால் அதிர்ச்சியடைந்த அவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

உரிய விசாரணை செய்யும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன் பேரில் ஆவடி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை ஐஸ்வர்யாவை கைது செய்து விசாரித்தார். அப்போது ஐஸ்வர்யா ஆவடி ஆனந்தா நகரில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருவதும், முகநூல் வழியாக அறிமுகமாகி பாரதிராஜா மற்றும் அவரது உறவினர் மகேந்திரன் ஆகிய 2 பேரிடமும் ரூ.34 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யாவை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story