‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வெளிச்சம் கிடைத்தது
சென்னை கொரட்டூர் வடக்கு ராஜீவ்நகரில் தெருவிளக்குகள் எரியாத நிலையில் இருக்கும் செய்தி, தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதிக்கு மீண்டும் வெளிச்சம் கிடைத்துள்ளது.
மதுபிரியர்கள் கோரிக்கை நிறைவேறியது
‘டாஸ்மாக்’ கடைகள் இரவு 8 மணிக்கு மேல் அடைக்கப்பட்டவுடன் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் தாங்களும் பாதிக்கப்படுகிறோம். எனவே ‘டாஸ்மாக்’ கடைகளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க வேண்டும் என்ற மதுபிரியர்களின் கோரிக்கை கடந்த வாரம் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இந்தநிலையில் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகம் அறிவித்துள்ளது. தங்களுடைய கோரிக்கை நிறைவேறியதால் மதுபிரியர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மோசமான நிலையில் மின்கம்பம்
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று பல மாதங்களாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. சிமெண்ட் பூச்சு பெருமளவு பெயர்ந்து மின்கம்பம் மோசமான நிலையில் இருக்கிறது. விபரீதம் எதுவும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், கள்ளிக்குப்பம்.
குண்டும், குழியுமான சாலை
சென்னை கொரட்டூர் சுபலட்சுமி நகர் 2-வது தெருவில் சமீபத்தில் குடிநீர் குழாய் பழுதுநீக்க சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவே இல்லை. கனரக வாகனங்கள் சென்றுவருவதால், தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரிய இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது. இந்த பிரச்சினைகள் தீர இத்தெருவில் சாலை சீரமைக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள், சுபலட்சுமி நகர்.
கழிவுநீர் அடைப்பால் அவதி
மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் 148-வது வட்டம் சி.டி.என்.நகர் 16-வது தெருவில் கழிவுநீர் அடைப்பு பிரச்சினை பல நாட்களாக இருக்கிறது. இதனால் இந்த தெருவில் கழிவுநீர் ஆறு போன்று ஓடுகிறது. இந்த தெருவில் ரேஷன் கடை உள்ளது. எங்களுடைய இன்னல்களை உணர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள்.
சாலையின் மேல் பஸ்நிறுத்தம்
மவுலிவாக்கம்- கெருகம்பாக்கம் எல்.அன்ட்.டி. பஸ் நிறுத்தம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று இந்த பஸ் நிறுத்த நிழற்குடை சாலையை ஆக்கிரமித்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களஆய்வு செய்து, சாலை மீது அமைந்துள்ள இந்த நிழற்குடையை சாலையோரமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாகன ஓட்டிகள்.
போக்குவரத்து போலீசார் கவனத்துக்கு...
பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் வெங்கடாபுரம் தெற்கு பூங்கா தெருவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்னி பஸ்கள் எப்போதும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ‘பார்க்கிங்’ இடம் போன்று பயன்படுத்தப்படுவதை போக்குவரத்து போலீசார் அனுமதிக்க கூடாது.
-ரமேஷ், ஆர்.டி.ஐ. ஆர்வலர்.
துரத்தும் நாய்களால் அச்சத்தில் மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் பாரிவாக்கம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பொன்நகர், பாணவேடு, வயலாநெல்லூர் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இரவு வேளைகளில் பணி முடிந்து வருவோரையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க வருகிறது. பலர் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தும் இருக்கிறார்கள். மக்களுக்கு நிம்மதி அளிக்கும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடுவார்களா?
- கோமகராஜ், பாரிவாக்கம்.
அபாயமான மின்கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு டி பிளாக் அருகில் உள்ள மின்கம்பத்தின் மேற்பகுதி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், சமூக ஆர்வலர்
அதிகாரிகள் தலையிட வேண்டும்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா கூதனூர் மாடம்பாக்கம் ஈ.ஆர். தெருவில் உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியாகி சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி அவ்வப்போது சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. எனவே இப்பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.
- பொதுமக்கள்.
சாலையில் ராட்சத பள்ளங்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 அடி சாலையின் கடைசியிலும், வலது பக்கம் திரும்பி காமராஜர் நகரில் உள்ள பல்நோக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை முழுவதும் ஆங்காங்கு ராட்சத பள்ளங்கள் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே மேற்கண்ட 60 அடி சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செ.பழனி, சமூக ஆர்வலர்.
Related Tags :
Next Story