வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற தாமதம் ஏன் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்
வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற தாமதம் ஏன்? என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வேலூர்
வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற தாமதம் ஏன்? என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்ற கடந்த சில நாட்களாக பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் இருந்து மோட்டார் மூலம் கோவிலுக்கு முன்பு உள்ள மைதானத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனினும் தண்ணீர் முழுமையாக வெளியேறவில்லை. அகழியில் இருந்து கால்வாய் வழியாக கோட்டைக்குள் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.
வேலூர் கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது அகழி உபரிநீர் பாலாற்றுடன் கலக்கும் வகையில் மதகுகளுடன் கூடிய கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் வேலூர்-பெங்களூரு சாலையின் அடியில் கடந்து புதிய மீன்மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைந்து பாலாற்றுக்கு செல்கிறது.
20 அடி ஆழ பள்ளம்
அகழியில் இருந்து வரும் தண்ணீர் கால்வாயுடன் இணையும் கழிவுநீர் கால்வாய் மண்ணால் மூடப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. இதனால் அகழிநீர் வெளியேறவில்லை. எனவே கழிவுநீர் கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்டு, அகழியில் இருந்து வரும் கால்வாய் கண்டறியும் பணி நடந்தது. சுமார் 20 அடி வரை தோண்டப்பட்டது. அப்போது அகழி கால்வாய் தண்ணீர் வெளியேறும் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால்வாய் பகுதியில் பக்கவாட்டில் சிறிய அளவிலான சுவர் இருப்பதால் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது. தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியது.
காலதாமதம்
இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் வந்து பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த நீரை வெளியேற்றிய பின்னர் மீண்டும் கூடுதலாக 5 அடி ஆழம் பள்ளம் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறிய அளவிலான பள்ளம் தோண்டும் பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து அகழிகால்வாயில் நவீன கருவிகள் மூலம் தூர்வாரப்படும். இதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கவனமுடன் மற்றும் மெதுவாக கையாள வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கால்வாயாகும். இந்த கால்வாயை சேதப்படுத்தினால் வருங்காலங்களில் தண்ணீர் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும். எனவே கால்வாயை சேதப்படுத்தாமல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தண்ணீர் வெளியேறுமா?
அகழியின் உட்புறத்தில் கால்வாய் மதகு பகுதியில் ஷட்டர் உடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அது சரிசெய்ய முடியாத நிலையில் உள்ளது. வேறுவழியில் தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முயன்றால் ஷட்டர் பகுதி உடையும் என தொல்லியல்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒருவேளை கால்வாய் பகுதியில் இருந்து அகழிக்கு வரும் ஆங்கிலேயர் கால கால்வாயில் நவீன கருவி மூலம் தூர்வாரினால் உள்ளே உள்ள ஷட்டர் பகுதி வழியாக தண்ணீர் வெளியேறுமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story