கலப்படம் வெல்லம் தயாரிப்பா?


கலப்படம் வெல்லம் தயாரிப்பா?
x
தினத்தந்தி 4 Dec 2021 7:26 PM IST (Updated: 4 Dec 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

கலப்படம் வெல்லம் தயாரிப்பா?

திருப்பூர்,
 கலப்படம் வெல்லம் தயாரிக்கப்படுகிறதா? என்று வெல்லம் தயாரிக்கும் பகுதியில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை ஆய்வு செய்தார். 
வெல்லத்தில் கலப்படம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் வெல்லம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். மடத்துக்குளம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. வெல்லத்தை வெளிர்நிறமாக்குவதற்கு சிலவகை வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால் அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெல்லம் தயாரிப்பாளர்கள் வேதிப்பொருட்கள் கலப்பதை தவிர்க்க வேண்டும். உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்படி வெல்லம் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல் செயலில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறும்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விற்பனை அதிகம் நடைபெறும். கலப்படம் செய்யாத வெல்லம் அடர் அரக்கு நிறத்தில் இருக்கும். அடர் மஞ்சள், வெளிர் மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் வெல்லத்தில் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு இருக்கும். அடர்ந்த அரக்கு நிற வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
வெல்லம் தயாரிக்கும் நிறுவனங்களில், வெல்லம் தயாரிப்பு செய்வதை வீடியோவில் பதிவு செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு வணிகர்கள் தரம் குறைந்த, பாதுகாப்பற்ற, கலப்படம் செய்த வெல்லத்தை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. உணவுப்பொருட்கள் தரம் குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.

Next Story