முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கார் டிரைவர் சாட்சியம்


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கார் டிரைவர் சாட்சியம்
x
தினத்தந்தி 4 Dec 2021 2:10 PM GMT (Updated: 4 Dec 2021 2:10 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடுத்த பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கார் டிரைவர் சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம், 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. 

டி.ஜி.பி.யின் டிரைவர் சாட்சியம்

இவ்வழக்கில் 6-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி.யிடம் கார் டிரைவராக இருந்த சென்னை ஆயுதப்படை போலீஸ்காரரும், தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான ராமராஜன் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 
அவர் காலை 10.45 மணியளவில் சாட்சியம் அளிக்க தொடங்கி நடந்த சம்பவம் பற்றி விளக்கமாக சாட்சி அளித்தார். இவருடைய சாட்சியம் பகல் 12.15 மணிக்கு நிறைவடைந்தது. அவர் அளித்த சாட்சியத்தை முழுமையாக நீதிபதி கோபிநாதன் பதிவு செய்து கொண்டார்.
மேலும் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல், இந்த வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்க அதிகாரம் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்து அதன் விசாரணை நடந்து வருவதால் அதுவரை இவ்வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்கக்கூடாது என்று ஒரு மனுவும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்து முடித்த பின் மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்படி கேட்டு மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

இம்மனுக்கள் மீது அரசு தரப்பில் பதில் தெரிவிக்க இவ்வழக்கு விசாரணையை 7-ந் தேதிக்கு (நாளை மறுநாள்) நீதிபதி கோபிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம், அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 2-வது சாட்சியான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் கணவரான அருணாச்சல பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் மற்றும் 7-வது சாட்சியான அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும், எனவே அவர்களுக்கு சம்மன் அனுப்பி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Next Story