குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Dec 2021 2:17 PM GMT (Updated: 4 Dec 2021 2:17 PM GMT)

கோழிக்கரையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோத்தகிரி

கோழிக்கரையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆதிவாசி கிராமம்

கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஏராளமான ஆதிவாசி கிராமங்கள் அமைந்து உள்ளன. இந்த கிராமங்களுக்கு உரிய சாலை வசதி இல்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்து செல்லும் பழங்குடியின மக்கள் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. 

இந்த நிலையில் குஞ்சப்பனை அருகே கோழிக்கரை ஆதிவாசி கிராமம் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மாமரம் பகுதியில் இருந்து செல்ல அமைக்கப்பட்ட தார்சாலையில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை

இதன் காரணமாக இந்த கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்குதலுக்கு அஞ்சியவாறு நடந்து சென்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் கூட இந்த கிராமத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. 

எனவே இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் பழுதடைந்து உள்ள பகுதியை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து கோழிக்கரை ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. குறிப்பாக சாலை வசதி மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படும் அந்த சாலையில் மழைக்காலத்தில் செல்வது பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களை இயக்கினால் பழுதடைந்துவிடுகிறது. 

நடந்து சென்றால் தவறி விழுந்து காயம் அடைகிறோம். மேலும் வனவிலங்குகள் துரத்தினால் கூட விரைவாக ஓடி தப்பிக்க முடியாத நிலை உள்ளது. அவசர நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு கூட விரைவாக செல்ல முடியவில்லை. எனவே அந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story