ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை திறக்க போலீசாருக்கு எதிர்ப்பு பண்ருட்டியில் பரபரப்பு
ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை போலீசார் திறப்பதற்கு, அவரிடம் சீட்டு போட்டு இருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஏலச்சீட்டு நடத்திய வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
இந்த நிலையில் இவரிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, இலுப்பை தோப்பு உள்ளிட்ட பகுதியில் மாரிமுத்துவிற்கு சொந்தமாக உள்ள அவரது வீடு மற்றும் அவர் ஏலச்சீட்டு நடத்திய அலுவலகம் உள்ளிட்டவைகளை பூட்டு போட்டு பூட்டினர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கடலுார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் பூட்டிய வீட்டின் கதவை திறந்து ஆவணங்களை எடுக்க வந்தனர்.
எதிர்ப்பு
இந்த நிலையில் ஏலச்சீட்டு போட்டு பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது, கோர்ட்டு அனுமதியில்லாமல் வீட்டின்பூட்டை திறந்து செல்லக்கூடாது.
அங்கு மாரிமுத்துவின் சொத்து, கடன், வரவு செலவு கணக்கு உள்ளிட்டவை உள்ளது. எனகே கோர்ட்டு அனுமதியின்றி மாரிமுத்து வீட்டின் பூட்டை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, கோர்ட்டு அனுமதியுடன் வருவதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story